இந்திய கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், டோனி மைக்கேல் கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு!

சென்னையை தலைமையிடமாகக் கொண்ட இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்கு பிராந்தியத் தளபதி யாக இதுவரை பதவி வகித்து வந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல், கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அவர் இப்புதிய அந்தஸ்தில் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக்கொண்ட ‘கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டல’ கடலோரக் காவல் படைத் தளபதியாக செயல்படுவார். இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் நவம்பர் 2023 இல் இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அவரது தலைமையில் ஓராண்டுக்கும் குறைவான நாட்களில், இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதி பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. சென்னை மற்றும் தூத்துக்குடி வெள்ளப்பெருக்க்கின்போது விரைந்து மேற்கொண்ட மீட்பு நிவாரணப்பணிகள், 2023 டிசம்பரில் எண்ணூரில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்றும் பணியை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஒருங்கிணைத்தல், சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுத்தல் மற்றும் இந்தியா-இலங்கை கடல் எல்லைக்கு அருகே போதைப்பொருள் உள்ளிட்ட கடத்தலை கட்டுப்படுத்துதல் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். சென்னையில் புதிய நவீன கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) மற்றும் பிராந்திய கடல் மாசுபாடு அகற்று மையம் (RMPRC), புதுச்சேரியில் கடலோர காவல்படை வான் நடவடிக்கை வளாகம் தொடங்குதல் போன்ற பணிகளும் இக்காலத்தில் நிறைவுபெற்றது. இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல், சென்னை லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தவுடன் 06 ஜூலை 1990 அன்று கடலோர காவல்படையில் சேர்ந்தார். கொச்சியில் உள்ள இந்திய கடற்படையின் கடற்பயணம் மற்றும் திசையறிதல் தொடர்பான பயிற்சி கல்லூரியில் சிறப்புப் படிப்பை அவர் முடித்தார். ஸ்வீடனில் உள்ள உலக கடல்சார் பல்கலைக்கழகத்தில் கடல்சார் விவகாரங்களில் முதுகலைப் படிப்பை முடித்தார், மேலும் டெல்லி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பயின்றார். அவர் கடலோர காவல்படை தொடர்பான வழக்குகளில் நீதிமன்றங்கள் மற்றும் பிற நடுவர் மன்றங்களில் மத்திய அரசின் நலன்களைப் பாதுகாபதில் பெரும் பங்காற்றினார். கடல்சார் தேடல் மற்றும் மீட்பு தொடர்பான தேசிய அளவிலான கொள்கைகள் பற்றிய நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளார். பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விஷயங்களில் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேலுக்கு செப்டம்பர் 2012 இல் மும்பை அருகே எரியும் வணிகக் கப்பலில் தீயை அணைப்பதஜில் காட்டிய துணிச்சலான செயலுக்காக தத்ரக்ஷக் பதக்கம் வழங்கப்பட்டது. மேலும் அவரது சீரிய சேவைக்காக 15 ஆகஸ்ட் 2024 அன்று அவருக்கு குடியரசு தலைவரின் தத்ரக்ஷக் விருதும் வழங்கப்பட்டது. ஒரு கடலோர ரோந்து கப்பல், ஒரு விரைவு ரோந்து கப்பல், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் போன்றவற்றை தலைமை வகித்து நடத்தியுள்ளார். கடலோரக் காவல்படையின் கிழக்குப் பகுதியின் தளபதியாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, புது தில்லியில் உள்ள கடலோரக் காவல்படை தலைமையகத்தில் துணை இயக்குநர் ஜெனரல் (மனித வளம்), துணை இயக்குநர் ஜெனரல் (தேர்வு வாரியம்) ஆகிய பொறுப்புகளையும் அவர் வகித்துள்ளார். திரு டோனி மைக்கேல் ‘கிழக்கு மற்றும் வடகிழக்கு மண்டல’ கடலோர காவல்படை தளபதியாக, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களை உள்ளடக்கிய பிராந்தியங்களுக்கான தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பார். இந்நீண்ட கடற்பரப்புக்கான கடலோர காவல்படை செயல்பாடுகள், கட்டமைப்பு வளர்ச்சி, திறன் மேம்பாடு, கொள்கை தொடர்பான அலுவல்கள் போன்ற பொறுப்புகளை அவர் மேற்கொள்வார்.


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *